'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனும் பழமொழியை போல, உப்பு அதிகமானாலும் உணவு குப்பைக்கு தான். உணவில் சரியான அளவு உப்பு, காரம் இருந்தால் தான் உணவு சுவையாக இருக்கும். ஆனால், நாம் அவசரத்தில் சமைக்கும் போது, இவற்றின் அளவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், கவலைப்படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஃபாலோ செய்து உப்பின் அளவை சமநிலைப்படுத்துங்கள்.
தேங்காய் பால்: உணவின் சுவையை அதிகரிக்கவும், சரியான பதத்திற்கு உணவை கொண்டு வர தேங்காய் பால் உதவுகிறது. சமைக்கும் போது, உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சிறிது தேங்காய் பால் அல்லது தேங்காய் விழுது சேர்க்கலாம். இதனால், உப்பு மட்டுப்படுவதோடு, உணவின் சுவை அதிகரிக்கும்.
தண்ணீர்: உணவில் உள்ள அதிகளவு உப்பை குறைக்க எளிமையான வழி தண்ணீர் சேர்ப்பது தான். குழம்பு அல்லது கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகிவிட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்படி செய்யும் போது, உப்பு சமநிலைக்கு வந்துவிடும்.
உருளைக்கிழங்கு: உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், நன்கு கழுவி வைத்துள்ள பச்சை உருளைகிழங்கை நான்கு துண்டுகளாக அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உணவில் சேர்த்து 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். இது உணவில் உள்ள அதிக உப்பை உறிஞ்சிவிடும். பின்னர், விருப்பப்பட்டால் உருளைக்கிழங்கை வெளியே எடுத்துவிடலாம்.
கோதுமை மாவு: உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதில் போட்டுவிடுங்கள். இந்த மாவு உருண்டைகள், உணவில் உள்ள அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும். அடுப்பை அணைப்பதற்கு முன் மாவு உருண்டைகளை எடுத்துவிடலாம்.
தயிர்: உணவில் உப்பு அதிகமாகி விட்டால், அதனை நீக்க தயிர் உதவியாக இருக்கிறது. இரண்டு ஸ்பூன் தயிரை குழம்பில் சேர்த்து சமைப்பதால், உப்பு சமநிலைக்கு வந்து கூடுதல் சுவையை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், குழம்பின் பதத்தை க்ரீமியாகவும் மாற்றும்.
எலுமிச்சை சாறு: உணவில், உப்பு அதிகமாக இருந்தால் சமைத்தற்கு பின், எலுமிச்சை பழ சாற்றை குழம்பு அல்லது உணவில் பிழிந்து கிளறி விடவும். இது, அதிக உப்பை உடனடியாக உறிஞ்சிவிடும்.
தக்காளி: கோழிக்கறி, மீன் குழம்பு ஆகியவற்றில் உப்பு அதிகமாக இருந்தால், நறுக்கிய ஒன்று அல்லது இரண்டு தக்காளியைச் சேர்க்கவும். இது குழம்பில் புளியின் சுவையை அதிகரித்து உப்பை சமப்படுத்த உதவும்.
வெங்காயம்: உணவில் உள்ள அதிகப்படியான உப்பை குறைக்க மற்றொரு எளிமையான வழி வெங்காயம் சேர்ப்பது தான். அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், இந்த உணவை உப்பு அதிகமாக இருக்கும் உணவில் சேர்த்தால் உப்பு சமநிலையாகிவிடும்.
இதையும் படிங்க:
டைல்ஸ் இடையே படிந்திருக்கும் கறை போகவே மாட்டீங்குதா? ஒரு முறை இதை வைத்து சுத்தம் செய்யுங்கள்!