சென்னை: சென்னை மாநகரில் 18 இடங்களில் கலை பண்பாட்டுத்துறை வழங்கும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" ஜனவரி 13 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோயில் திடல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, அரசு இசைக்கல்லூரி, கதிப்பாரா சந்திப்பு, ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.பி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், தி நகர் நடேசன் பூங்கா, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், கேகே நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமெக் பள்ளி வளாகம், கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் நேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாகச் சென்னை கிண்டியில் உள்ள கதிப்பாரா சந்திப்பில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை’ அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று (ஜனவரி 14) பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ. சாமிநாதன், “தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கடந்த 13ஆம் தேதி தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.
சென்னை மாநகர பகுதிகளில் 18 இடங்களில் நடைபெறுகிறது. இதில் ஏறத்தாழ 1,500 கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கென ஏறத்தாழ முதலமைச்சர் ரூ.11 கோடி நிதியாக வழங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு களம் ரெடி.. அதக்களம் செய்த காத்திருக்கும் 'காளை'கள்!
கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி அதிமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழரின் பண்பாட்டை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ‘கலை விழா’ என நாட்டுப்புற கலைஞர்களைப் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் மக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பறை இசைக் கலைஞர் ஆடல் அரசு கூறுகையில், "சென்னை சங்கமம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனுடைய முயற்சியானது கலைஞர்களை ஒன்று கூட்டி சென்னை மாநகரத்தில் ஒரு பெரும் விழாவை நடத்துவது. நகரத்தில் இருக்கக்கூடிய மக்களுக்குக் கிராம சூழலைக் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்த விழா கொண்டு சேர்க்கிறது.
நாங்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியிலிருந்து வந்துள்ளோம். இது போல தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலிருந்தும் கலைஞர்கள் வந்திருக்கின்றனர். தொடர்ச்சியாக மக்கள் இதைப் பார்த்து சந்தோஷமாக இருக்க வேண்டும். இது ஒரு கொண்டாட்டத்தின் வெளிப்பாடுதான்” என்றார்.
மேலும் பேசிய பார்வையாளர் பிரகாஷ், “பெரும்பாலும் சென்னை மாநகரத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு இது போன்ற கலை வடிவங்களைப் பார்க்க முடியாதா? என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். இது போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சொந்த ஊருக்கே சென்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது" என்றார்.
‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில்’ பங்குபெறும் கிராமிய கலைஞர்களுக்குத் தங்கும் இடம், உணவு உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.5000 வழங்கப்படுகிறது.