கோவை: அயலகவாழ் தமிழர் மாநாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் டிரேட் கமிஷ்னர் விஷ்ணுவை சந்தித்தார்.
பின்னர் இலங்கை இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதவாது
தமிழ்நாடு அரசு நடத்தும் அயலகவாழ் தமிழர் மாநாட்டிற்காக வருகை தந்துள்ளேன். இதில் பல்வேறு நாடுகளின் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர். இது மிகவும் சிநேகப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்பு என்பது வரலாறு தொட்டே இருந்து வருகிறது. இது தொப்புள்கொடி உறவு. இந்தியாவையும் இலங்கையையும் 32 கிலோ மீட்டர் மட்டும் தான் கடல் பிரிக்கிறது. இருப்பினும் எங்களுக்குள் அன்பு நட்புறவு உண்டு.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. இந்திய அரசு இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை அறிவித்துள்ளதற்கு நன்றி. மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான தீர்வு காண்பதற்கு முயற்சி செய்வோம். இங்குள்ள நிறுவனத்தினர் எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள். எங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு முன் வர வேண்டும்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இலங்கைக்கு அவரது அமைச்சகம் சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு உதவிகள் குறித்து கேட்டுள்ளோம். அதற்கான உதவிகளை அவர் தருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.