திருவள்ளூர்:சென்னையின் புறநகர பகுதிகளுள் ஒன்றான ஆவடியில் இன்று (ஜூன் 30) ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வை ஆவடி காவல் ஆணையரகம், நாசரேத் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் பல வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைகளும், நடனப் பிரியர்களை ஈர்க்கும் வகையில் பரதநாட்டியம் நடத்தப்பட்டது. சிறுவர் சிறுமியர்களைக் கவரும் வண்ணம் மாட்டு வண்டி, குதிரை வண்டி பயணம். இளைஞர்கள் ஆர்வம் காட்டும் வகையில் கூடைப்பந்து, இறகு பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
ஹேப்பி ஸ்ட்ரீட்க்கே உரிய DJ அமைப்பும் இடம் பெற்றிருந்தது. அதில் இசைக்கப்பட்ட திரை இசை பாடல்களுக்கு பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் உற்சாகமாக கலந்துகொண்டு நடனத்தின் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.