பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் கோயம்புத்தூர்:கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் MyV3Ads என்ற நிறுவனம் மீது தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சினர் மற்றும் சில பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், பாமகவின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதிக்கு MyV3 Ads நிறுவனத்தை சேர்ந்த கண்ணன் என்ற நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், அசோக் ஸ்ரீநிதிக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட கண்ணன் என்ற நபர், MyV3 Ads மீது அளிக்கப்படும் புகார்களை நிறுத்த வேண்டும் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், அசோக் ஸ்ரீநிதி தனது செல்போன் உரையாடல் பதிவை அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.
மேலும், இந்த கொலை மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொலை மிரட்டல் விடுத்த நபர், நிறுவனம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அசோக் ஸ்ரீநிதி மீது கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்.29) புகார் அளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக முன்னாள் கோவை மாவட்டத் தலைவர் தங்கவேல் பாண்டியன், MyV3Ads நிறுவனம் மீது கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த நிறுவனம் ஒரு லட்சம் நபரிடம் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக, 13 புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது.கொலை மிரட்டல் விடுத்த நபர் மீதும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அசோக் ஸ்ரீநிதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
தாங்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளோம். அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகி! - BJP Executive Petition To Mk Stalin