மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டத்தில் சாலைகளை பலப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் திட்டத்தின் கீழ், கீழையூர் - தாயமங்கலம், சாலைக்கிராமம் - சருகுணி சாலையை பலப்படுத்த 1 கோடியே 75.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டது.
இந்த பணிகளுக்கான இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு பொறியாளரிடம் உரிய சான்று பெற்று, அதனை பிப்ரவரி 26ஆம் தேதி மாலை 4 மணிக்குள் ஆன்லைன் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், டெண்டருக்கான விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் உதவியாளர் இளங்கோவிற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசியல் தலையீடு உள்ளது. நான் முறையாக விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களோடு டெண்டருக்கு விண்ணப்பம் செய்து, எந்தவித காரணமின்றி நிராகரித்துள்ளனர்.