சென்னை: சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சேர்த்து வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகள் மூலமாக 2030 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக 1986 ஆம் ஆண்டில் காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியில், சுமார் 11 ஆயிரம் மெகா வாட் நிறுவு திறனுடன் இந்தியாவிலேயே இரண்டாவது இடமும், சூரிய ஒளிச்சக்தி மின்சார உற்பத்தியில், சுமார் 9 ஆயிரத்து 400 மெகா வாட் நிறுவு திறனுடன் நாட்டிலேயே 3-வது இடமும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
இதற்கென்று, தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனம் (Tamil Nadu Green Energy Company Limited) தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு மிகச்சிறப்பான பணியினை செய்து வருகிறது. இந்த நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் எனும் அளவு மின்சாரத்தை, சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குப்பையை கொட்டியது யார்? அவை ஆபத்தில்லாதவை என்ற கேரள அலுவர்கள்; கடிந்துகொண்ட ஆட்சியர்!
அதன்படி, வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகளான நீரேற்று மின் திட்டங்கள் (Pumped Storage Projects), மின்கல சேமிப்பு திட்டங்கள் (Battery Energy Storage Systems), உயிரி ஆற்றல் (Bio-Mass) மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் (Co-Gen) வாயிலாகவும் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பசுமை எரிசக்தி உற்பத்தியை தமிழ்நாட்டில் மேலும் அதிகரிக்க… pic.twitter.com/7GHkg8RwJW
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 20, 2024
மத்திய அரசின் 2030 ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கென்று, 43 சதவீதமாக இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், தமிழ்நாடு 50 சதவீதம் என்ற மிக உயரிய இலக்கினை அடையத் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றது. இதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இவை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் உறுதுணையாக இருக்கும். இதன் மூலம், பொதுமக்களுக்கும் வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகளுக்கு தரமான மின்சாரத்தை நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கப்படும்," இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.