தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசின் மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - New Criminal Laws - NEW CRIMINAL LAWS

மத்திய அரசின் மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களுக்கு தடை விதிக்கவும், மீண்டும் அவை ஆங்கிலத்திலேயே தொடர உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 11:01 PM IST

சென்னை:இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய சாட்சியச் சட்டம் 1872 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 க்கு மாற்றாக தற்போது மத்திய அரசால் பாரதீய நியாய சன்ஹிதா 2023, பாரதீய நாகரிக் சுரேக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதீய சாக்ஷீய அதினீயம் 2023 என பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் நாடாளுமன்றத்தில் 2023 டிசம்பர் 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் 25ஆம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த மூன்று சட்டங்களும் ஜூலை 2024 முதல் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த சட்டங்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மத்திய அரசு பெயர் வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், 9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி ஆட்சி மொழியாக உள்ளது.

இந்திய மக்களில் 43.63 சதவிகித மக்கள் மட்டுமே இந்தி மொழி பேசுகின்றனர். மீதமுள்ள 56.37 சதவிகித மக்கள் மற்ற மொழியை பேசுபவர்களாக உள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தி மொழியில் பெயர் வைத்திருப்பது இந்தி பேசாத மக்களிடையே குழப்பத்தையும், தெளிவின்மையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

இதன் மூலம் இந்தி மொழி தெரியாத வழக்கறிஞர்கள், சட்ட பேராசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் பாதிப்பிற்குள்ளாவார்கள். இந்தியை உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக 2008ல் அறிமுகப்படுத்த சட்ட அமைச்சகம் முயன்ற போது பல முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் கருத்துக்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் முழு அமர்வின் முடிவு அடிப்படையில், சட்டக் கமிஷன் தனது முடிவை கைவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்தை தவிர்த்து வேறு மொழிகளில் நாடாளுமன்றம் சட்டமியற்ற இந்திய அரசியலமைப்பு பிரிவு 348ன் படி நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 272 மற்றும் உரிமையியல் நடைமுறைச் சட்டம் 1908 பிரிவு 137 மாவட்ட மற்றும் விசாரணை நீதிமன்றங்களின் வழக்காடு மொழிகளை தீர்மானிக்க அதிகாரம் அளிக்கிறது. தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 பிரிவு 4 தமிழ் மற்றும் ஆங்கிலத்தை நீதிமன்ற மொழிகளாக அங்கீகாரம் அளிக்கிறது.

உச்சநீதிமன்றம் ஆங்கிலத்தில் அளிக்கும் தீர்ப்புகளை சிறப்பு ஏற்பாடுகள் செய்து இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒரிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மூன்று சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 346,347 மற்றும் 348 க்கு எதிரானது.

இந்திய மொழிகளையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, இந்தி மொழியில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்களும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது, ஆட்சி மொழிச் சட்டங்களுக்கு எதிரானது என அறிவிக்கவும், ஆங்கிலத்திலேயே தொடர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details