தஞ்சாவூர்:தஞ்சை மாநகராட்சி பூக்காரத் தெரு, அன்பு நகர் உள்ளிட்ட 36வது வார்டு பகுதியில் கடந்த பல மாதங்களாக பாதாளச் சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. அதனை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வந்தனர். அதையடுத்து பாதாளச் சாக்கடை குழாயை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று சுமார் 15 அடி ஆழப்பள்ளத்தில் சேதமடைந்த குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் மேலே வரும் போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவேந்திரன்(32) மற்றும் தஞ்சையைச் சேர்ந்த ஜெயநாராயண மூர்த்தி(27) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தேவேந்திரன் என்பவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.