தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலக்கோடு அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு! - Palacode Elephant Attack - PALACODE ELEPHANT ATTACK

Palacode Elephant Attack: பாலக்கோடு அருகே உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில் 70 வயது முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Palacode Elephant Attack
Palacode Elephant Attack

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 2:53 PM IST

தருமபுரி:தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், காட்டுப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அந்த வகையில், பாலக்கோடு பகுதியில் ஒற்றை காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்தது.

அப்பொழுது, ஜெர்த்தலாவ் ஏரி பகுதியில் அந்த ஒற்றை ஆண் யானை முகாமிட்டு வந்தது. ஆண் யானை ஊருக்குள் நுழைந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளனர். ஜெர்த்தலாவ் ஏரியில் உள்ள தண்ணீரில் நாள் முழுவதும் ஆனந்தமாய் குளித்து வந்த ஒற்றை ஆண் யானை, நேற்று மாலை அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றது.

பின்னர், அருகில் உள்ள தீர்த்தார அள்ளி கிராமத்திற்கு ஒற்றை ஆண் யானை நுழைந்துள்ளது. அப்பொழுது யானையை வேடிக்கை பார்க்க தீர்த்தார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் (70,) தனது தோட்டத்தின் வழியே சென்றுள்ளார். அப்போது, ஏரி பகுதியில் செல்லும்போது பர்கூர் காப்புகாடு மலைப் பகுதியில் இருந்து வெளியேறி வந்த ஒற்றை காட்டு யானை, எதிர்பாராத விதமாக முதியவர் கிருஷ்ணனை தாக்கியுள்ளது.

இந்த யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த முதியவர் கிருஷ்ணன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள் பாலக்கோடு காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், முதியவரின் உடலைக் கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பாலக்கோடு காவல்துறை மற்றும் வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் குடிநீர் இல்லாததால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாக உள்ளது.

இதனைத் தடுக்க கோடை காலங்களில் வனப்பகுதிக்குள் யானைகளுக்கான உணவு வழங்கும் திட்டமும், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி யானைகளுக்கான குடிநீர் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் வகையிலும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சொந்த மகளுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. தந்தைக்கு சாகும் வரை சிறை! - POCSO Case

ABOUT THE AUTHOR

...view details