கோயம்புத்தூர்: கேரளாவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நபரை, கோவை விமான நிலையத்தில் குடியுரிமை பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கைது செய்தனர். தொடர்ந்து, இது குறித்து கேரளா போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அந்த நபரை அழைத்துச் செல்ல போலீசார் கோவை வருகின்றனர்.
விசாரணையில், கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள வடகராவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பேபி என்ற மூதாட்டி மற்றும் அவரது 9 வயது பேத்தி மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேத்தி படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை அவர் கோமாவில் இருந்து மீளவில்லை.
இந்த விபத்து குறித்து, வடகரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரானை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், விபத்து ஏற்படுத்திய பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் இல்லாததால், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிவதில் போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனால், விபத்து நடந்த இடத்தில் வெள்ளை நிற பெயிண்ட் கிடைத்தது.
இதனை வைத்து, அப்பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கார் பழுதுபார்க்கும் கடைகளில், வெள்ளை நிற வாகனங்கள் பழுது நீக்க வந்தால் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்திருந்தனர். இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இரண்டு வெள்ளை நிற கார்கள் அருகிலுள்ள பழுது நீக்கும் கடையில் சர்வீஸ் செய்யப்பட்டது தெரியவந்தது. அவற்றில் ஒன்று, கடந்த மார்ச் மாதத்தில் புறமேரி பகுதியில் பழுதுபார்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கட்டுக்கட்டாக போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; கேரளாவை சேர்ந்தவர் கைது! |
இதில், ஒரு கார் விபத்துடன் பொருந்தக் கூடிய சேதங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, போலீசார் விசாரிக்கையில் கார் அதே பகுதியைச் சார்ந்த ஷாஜீல் என்பவரதும், கார் சுவரில் மோதியதாகக் கூறி காப்பீடு கோரியதும் தெரியவந்துள்ளது. இதில், காப்பீட்டு தொகைக்காக சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், காரின் பம்பர், பானட், முன் விளக்கு மற்றும் கண்ணாடியில் சேதங்கள் இருந்துள்ளது. இதனை வைத்து விபத்திற்குள்ளானது இந்த கார் என போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு ஷாஜீல் அரபு நாட்டிற்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஷாஜீலை விசாரானைக்கு ஆஜராகுமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அவர் ஆஜராகாததால் தொடர்ந்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த ஷாஜீல் தற்போது கோவை விமான நிலையத்திற்குள் வந்தார். அவரை குடியுரிமை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, இது குறித்து கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.