மயிலாடுதுறை:மணல்மேடு பேருந்து நிலையத்தில் இருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில், புதிய அரசு பேருந்து சேவை நேற்று (பிப்.8) துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், உரிய நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்து பணிக்குச் சென்றனர். இந்நிலையில், இப்பகுதிக்கு புதிய பேருந்து வசதி வேண்டுமென நீண்ட நாட்களாக பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேற்று மணல்மேட்டில் இருந்து பட்டவர்த்தி வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், மணல்மேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் புதிய பேருந்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், தானே பேருந்தை ஓட்டிச் சென்றார். மணல்மேடு, திருவாளபுத்தூர், பட்டவர்த்தி, மல்லிகை கொல்லை, வில்லியநல்லூர், நீடூர் வழியாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை வந்த புதிய பேருந்தை, கிராம மக்கள் வழிநெடிகளும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.