தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று பேர் படுகொலை வழக்கு; குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை - நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - 2014 murder case in nellai

கடந்த 2014ம் ஆண்டு இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு 5 ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனையும் விதித்து திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர்
கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 10:45 PM IST

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உடப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் சிலர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதில், இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த வேணுகோபால், முருகன், ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் உடப்பன் குளம் வந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்கள் இருவரையும் வழியனுப்ப உடப்பன் குளத்தைச் சேர்ந்த காளிராஜ் சங்கரன்கோவிலுக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வடமன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் பைக்கை வழிமறித்து காளிராஜ், வேணுகோபால், முருகன் ஆகிய மூன்று பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து அப்போதைய சங்கரன்கோவில் டிஎஸ்பி விசாரணையின் பெயரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி உள்பட 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 2வது கூடுதல் மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் (பிசிஆர்) நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகிய 3 பேரும் இறந்தனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உடப்பன்குளம், ராமநாதபுரம், நாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, கண்ணன், உலக்கன், காளிராஜ், கண்ணன், முருகன், முத்துகிருஷ்ணன் கண்ணன், சுரேஷ் ஆகிய 11 பேரை குற்றவாளிகள் என கடந்த 24ம் தேதி சிறப்பு நீதிபதி அறிவித்தார்.

மேலும், அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று ( செப் 26) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியிருந்தார். மீதமுள்ள 11 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்தும் சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று 11 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்படும் என்பதால் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பிற்பகல் முதல் பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க :பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை; தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னதாக, குற்றவாளிகளில் 11 பேரில் பொன்னுமணி, சுரேஷ், உலக்கன் ஆகிய 3 பேர் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேசமயம், குற்றவாளிகள் அனைவரும் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி கண்டிப்பாக கூறியதால் மருத்துவமனையில் இருந்த மூன்று பேர் உட்பட 11 பேரும் சிறப்பு நீதிபதி முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தண்டனை விவரங்களை அறிவிக்க விசாரணை மாலை 4 மணிக்கு தொடங்கி நிலையில் விசாரணையை சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் ஒத்திவைத்தார். இதையடுத்து மீண்டும் இன்று இரவு சுமார் 8.30 மணி அளவில் சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு விவரங்களை வெளியிட்டார்.

அதில், மூன்று பேரை கொலை செய்த வழக்கில் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ள நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் மீதமுள்ள ஏழு நபர்களில் ஐந்து பேருக்கு தலா ஐந்து ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு தலா இரண்டு ஆயுள் தண்டனையும் விதித்து திருநெல்வேலி வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இரு சமூகத்தினரிடைய ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details