சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவருக்கு, பல்கலை வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அந்த கல்லூரி மாணவியின் எப்ஐஆர் கசிந்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், IPCஇல் (Indian Penal Code) இருந்து BNSக்கு (Bharatiya Nyaya Sanhita) மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பிரச்சனையால் தான், மாணவி வன்கொடுமை தொடர்பான எப்ஐஆர் மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை எப்ஐஆர் கசிந்தது குறித்து தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
எப்ஐஆர் (FIR) கசிந்தது எப்படி?:
இதுகுறித்து தேசிய தகவல் மையத்தின் மூத்த இயக்குநர் அருண்மொழிவர்மன் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "IPC-இல் இருந்து BNS-க்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் எப்ஐஆர் மற்றவர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம். மாநில குற்ற ஆவணக் காப்பகம் வழங்கிய பட்டியலின்படி, 64, 67, 68, 70, 70 போன்ற பிரிவுகளின் கீழ் பதியப்படும் எப்ஐஆர்களை பொதுவெளியில் யாரும் பார்க்காத வண்ணம் பிளாக் செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; தேசிய மகளிர் ஆணையத்தின் குழு நடத்திய முதல் நாள் விசாரணை என்ன?
ஆனால், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எப்ஐஆர் கசிந்துள்ளதாகத் தெரிகிறது. இதனை மறுபரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான வழக்கில், முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானதற்கு மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சிசிடிஎன்எஸ் அமைப்பில் நேரிட்ட தொழில் நுட்பக் கோளாறே காரணம்என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.