CSK Players Watched Movie சென்னை: 17வது ஐபிஎல் தொடர் நேற்றைய முன்தினம் (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடியது.
இந்த போட்டியில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 8 பந்துகள் மீதம் இருக்கும் போதே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக, தனது அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியை வரும் 26ஆம் தேதி சென்னை அணி எதிர்கொள்கிறது.
மேலும், மற்ற ஆண்டுகளைப் போல் அல்லாது, இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இல்லாமல், ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கியுள்ளார். ஆகவே, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியானது சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை அணி வீரர் தீபக் சஹார் உள்ளிட்டோர், சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்யம் திரையரங்கில் நேற்று (மார்ச் 23) இரவு திரைப்படம் பார்க்க வந்துள்ளனர்.
அங்கு அவர்கள், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகைகள் திஷா பதானி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'யோதா' திரைப்படத்தை பார்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தோனி மற்றும் சென்னை அணியின் சகவீரர்கள் திரைப்படம் பார்க்க வந்ததை அறிந்த ரசிகர்கள், ஆரவாரத்துடன் அவர்களைக் காண திரையரங்க வளாகத்தில் குவிந்தனர்.
மேலும், அங்கு குவிந்த ரசிகர்கள், திரையரங்கில் இருந்து தோனி உள்ளிட்ட வீரர்கள் புறப்படும்போது 'தோனி தோனி' என்று தொடர்ச்சியாக கரகோஷங்கள் எழுப்பியதோடு புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர். இந்த நிலையில், சத்யம் திரையரங்கிற்கு தோனி மற்றும் சென்னை அணியின் சக வீரர்கள் வருகை தந்ததை ரசிகர்கள் எடுத்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க:ரசிகர்களுக்கு ராமராஜன் திடீர் அழைப்பு! - Ramarajan Saamaniyan Movie