தருமபுரி: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் தருமபுரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், “பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு இரண்டு கோடிக்கு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று மோடி சொன்னார். வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மணி ஆர்டர் மூலம் 15 லட்சம் வீட்டிற்கே வரும் என்றும் கூறினார். ஆனால் இன்னும் வரவில்லை.
நீங்கள் கருப்பு பணத்தை எடுத்து வரவேண்டாம், அதானி, அம்பானி உள்ளிட்ட 10 பேரிடம் உள்ள கருப்பு பணத்தை எடுத்தாலே போதும். தமிழ்நாட்டில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் வந்தார்கள், பார்த்தார்கள். முதலமைச்சர் 30 ஆயிரம் கோடி கேட்டார். ஆனால் 30 பைசா கூட கொடுக்கவில்லை. தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் எல்லாவற்றையும் துணிச்சலாக எதிர்த்து நின்று பேசுபவர் ஸ்டாலின் தான்.
மணிப்பூரில் 36 லட்சம் பேர் தான் மக்கள் தொகை. அங்கு ஏற்பட்ட இனக் கலவரத்தை கட்டுப்படுத்தவில்லை. அதே போல் டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள். பொது நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள், இந்தியாவை பாகம், பாகமாக விற்பனை செய்து விட்டார்கள். இந்தியாவில் முதல் குடிமகன் தான் கையெழுத்து போட வேண்டும். ஆனால் ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு சென்றார். ஆனால் அங்கு ராம்நாத் கோவிந்த் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால், உள்ளே விடவில்லை.
இன்றைய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை கூட உள்ளே விடவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்குமா, இங்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அயோத்தியில் ராமர் கோயில் கட்டினார்கள் மகிழ்ச்சி, வரவேற்கிறோம்.