கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். இவரது தொகுதி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளதாக போட்டோக்கள் மற்றும் அறிக்கையைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் சில நாட்களுக்கு முன்னர் பகிர்ந்து இருந்தார்.
தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையைப் புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ என்ற முறையிலும், பாஜகவின் தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், 2011ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ தரச்சான்று கிடைத்தது என்றும், அதே போன்று ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் பதிவிட்டிருந்தார்.
மேலும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேசத் தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் இந்தச் சாதனையைச் சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல, திமுக மாணவர் அணித் தலைவர் ராஜிவ்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "கோவில்'' திரைப்படத்தில் நடிகர் வடிவேல் நாச்சியப்பன் பாத்திரக் கடையில் கப் வாங்கியது போல் 5000 ரூபாய் கொடுத்து வானதி சீனிவாசன் தனது அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வாங்கியுள்ளதாகக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.