சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலை, கோட்டம்-69ல் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதனையடுத்து, ஜி.கே.எம் காலனி 12ஆவது தெரு, சென்னை துவக்கப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், கோட்டம்-69ல் புதியதாக கட்டப்பட்டுள்ள சென்னை துவக்கப் பள்ளி, கோட்டம்-67 மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், கோட்டம்-66 நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து, பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டார்.
இதனையடுத்து, வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதல் தொகுதியாக சொந்த தொகுதிக்கு வந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “இது என்னோட சொந்த தொகுதி. அவர்கள் வீட்டுப்பிள்ளை போன்று என்னை பார்க்கக்கூடிய தொகுதி. எனவே, எப்போது வேண்டுமானாலும் வருவேன்” என்றார்.