சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூன் 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஜூன் 5ஆம் தேதி, பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவருடைய இல்லத்தின் வெளியிலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லையென்றால், சமானிய மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி, எதிர்கட்சிகள் தமிழகத்தில் நடைப்பெற்ற கொலை, கொள்ளை குறித்து தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல்துறை ஆணையராக, சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனராக இருந்த அருண் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, காவல்துறையின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது, குற்றச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல்துறை இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்.. மனைவி பொற்கொடிக்கு அளித்த வாக்குறுதி!