திருநெல்வேலி:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் ஒரு பிரிவான திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 3 மண்டலங்களில் ஓட்டுநர் 169 பேர், நடத்துநர் 260 பேர் என மொத்தம் 559 பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நிரப்ப திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பானது போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே, மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு துறைகளில் அவுட் சோர்சிங் எனப்படும் தனியார் பணி நியமனங்களை அனுமதித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசு திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் ஆட்கள் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்காலத்தில் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கபட்டு விடுமோ? என்ற அச்சம் தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது. மேலும், இந்த டெண்டர் மூலம் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள இளைஞர்களின் ஆசை கனவாகி போகும் நிலை உருவாகியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்குக்கு தமிழக அரசு துணை போவது போல் அமைந்துவிடும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் சார்பில் தொலைபேசியில் பிரத்யேகமாக தொடர்பு கொண்டோம். அப்போது, நாம் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு அமைச்சர் அளித்துள்ளார். கேள்விகள் பின்வருமாறு;
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது அது உண்மைதானா? என்ற கேள்விக்கு, "ஆமாம், ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் (SETC) இதுபோன்று 685 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தோம். பின்னர் 685 பணியிடங்களுக்கு நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமடுத்தப்பட்டனர்.
அதன் பிறகு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 685 பேர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், சட்டப்பேரவை கூட்டம் முடிந்த உடன் திருநெல்வேலி மட்டுமல்லாமல் மீதமுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களிலும் பணி நியமன நடைமுறை தொடங்க இருக்கிறது. அதுவரைக்கும் ஓய்வு பெறுபவர்கள். இயக்கி வந்த பேருந்துகளை ஓட்ட ஆளில்லாததால், பேருந்து சேவை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்காலிக பணி நியமனம் செய்யப்படுகிறது. நிரந்தர பணி நியமனம் செய்யப்பட்ட பிறகு, தற்காலிக பணியாளர்கள் விடுவிக்கப்படுவார்கள்" என்றார்.