விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அன்னியூர் சிவா உடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பொன்முடி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூன்றாண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு தீட்டிய மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் இலவசப் பேருந்து திட்டம் போன்ற பெண்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை பெண்களுக்கு வழங்கியதால் தான் அனைத்து பெண்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை அளித்துள்ளனர்.
பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த கேள்விக்கு, நேரத்திற்கு தகுந்தார் போல் பேசக்கூடியவர். அவரது கட்சியினரும் அப்படித்தான் நேரத்திற்கு தகுந்தார் போல் மாறிக் கொள்வர். அவர்களுக்கு கொள்கை எல்லாம் ஒன்றும் கிடையாது. அவர் சொல்வது சகஜமான விஷயம், அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.