சென்னை:சென்னையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று விடும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார், அந்த மைனர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து செய்ததாகவும், அதனால் கருவுற்ற சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது, குழந்தைக்கு சிகிச்சை பெற, ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு சென்று போது, சிறுமி குழந்தையுடன் வந்தது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, குழந்தைகள் நல குழு அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் முத்துகுமார் மற்றும் சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஆட்டோ டிரைவர் முத்துக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து முத்துகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையும் படிங்க:நெல்லையில் மீண்டும் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்! அதிர்ச்சியில் ரெட்டியார்பட்டி!
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (பிப்.5) நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், "ஆட்டோ டிரைவரும் தானும் திருமணம் செய்து கொண்டதாகவும், மாமியார் தான் தன்னை கவனித்து வருவதாகவும் தெரிவித்த சிறுமி, ஆட்டோ ஓட்டுநருடன் தொடர்ந்து வாழ விரும்புவதாகவும்" தெரிவித்துள்ளார்.
அதனைக் கேட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், முத்துக்குமாருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் மட்டுமே, அவர்கள் கணவன் - மனைவி என்ற உறவை தகுதி நீக்கம் செய்து விடாது என கருத்து தெரிவித்தார். மேலும், முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவருக்கு வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.