மதுரை:திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் இரண்டு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
குத்தகை காலம் நிறைவடைந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் இந்த நிலம் அரசிடம் வழங்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே BBTC நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு முன்பாக தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் இருந்து வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்கூட்டியே தொழிலாளர்களை வெளியே அனுப்புவதால், தாமாக முன்வந்து ஓய்வு பெறுவோருக்கு 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1.4 லட்சம் முதல் 2.80 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், 60 வயது எட்டியவர்களுக்கு எவ்விதமான தொகையும் வழங்கப்படவில்லை. இந்த தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது. சொந்த இடமோ, வீடோ இல்லாத நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது, அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஆகவே மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை அரசு செய்ய வேண்டும். நத்தம் புறம்போக்கு நிலங்களில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர முன் வர வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையில், அவர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்ட கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதிகள், அங்கன்வாடிகள் போன்றவற்றில் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.