தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி, “அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா? மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் என் தாய்மார்கள் மற்றும் சகோதரியின் தாலிகளைக் கூட விட்டுவைக்காது” என்று பேசினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோடி கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரை போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளை பேச மோடிக்கு ஏதுமில்லை. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்டரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார்.