சென்னை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் கனமழை:நீலகிரி மாவடத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அவலாஞ்சியில் 34 செ.மீ மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அப்பர் பவானியில் 22 செ.மீ மழை பெய்து உள்ளது.
இதேபோல் தேவாலாவில் 15 செ.மீ, பந்தலூர் தாலுக்காவில் 13 செ.மீ, எமரால்டு என்ற இடத்தில் 12 செ.மீ மழையும் பெய்துள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கேரட் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன.
பேரிடர் குழு:நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருவதால், பேரிடர் மீட்புப்படையினர் உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிட 4 இடங்களில் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 10 வீரர்கள், மீட்புப்பணியில் ஈடுபடத் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
16 மாவட்டங்களில் மழை:கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.