தற்போதைய காலகட்டத்தில் டைப்-2 நீரிழிவு நோயாளிகள் வெகுவாக அதிகரித்து வருகின்றனர். நிரிழிவு நோய் ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பல முயற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். இருப்பினும், சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலமும் சரியான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த ஆபத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தினசரி நடைபயிற்சி மிகவும் நன்மை பயக்கும் என தெரியவந்துள்ளது. எனவே, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? வாரத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்? என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆய்வு சொல்வது என்ன?: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் (American Diabetic Association) தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என வாரம் முழுவதும் இல்லாவிட்டாலும், வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது நடப்பது நல்லது என்று ஆய்வு கூறுகிறது.
பிஸியான வாழ்க்கை சூழல்!: பகலில் அரை மணி நேரம் ஒதுக்குவது கடினம், நேரமில்லை என்பவர்கள் நடக்கும் நேரத்தை தங்களுக்கு ஏற்றவாறு பிரிக்க வேண்டும் என்கின்றனர். அதாவது, 30 நிமிடத்தை 10 நிமிடங்கள் என மூன்று பங்காக பிரிக்க வேண்டும்.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு குறைந்தது பத்து நிமிடங்கள் நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், மணிக்கு மூன்று முதல் நான்கு மைல் வேகத்தில் நடப்பது இன்சுலின் அளவை அதிகரித்து இதயம் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கைகள்: இந்த வரிசையில் நடப்பதற்கு முன் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. மூட்டுகளில் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, சமதளத்தில் தொடர்ந்து நடக்க வேண்டும். வானிலை சாதகமாக இருக்கும்போது காலையிலோ அல்லது மாலையிலோ நடைபயிற்சி செய்வதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பள்ளம் மற்றும் மேடுகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
நடைபயிற்சியின் கூடுதல் நன்மைகள்:
நல்ல உடலமைப்பு: தொடர்ந்து நடப்பது தசைகளை வலுப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் தோரணையை மாற்றுகிறது.
எடை இழப்பு: நடைபயிற்சி கலோரிகளை எரித்து, எடையை குறைக்க உதவுகிறது. மேலும் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
சருமத்தைப் பொலிவாக்கும்: நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, முகம் இயற்கையான பளபளப்புடன் புத்துணர்ச்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை ஆல் கிளியர் செய்யும் வாழைத்தண்டு..இப்படி எடுத்துக்கோங்க! டைப் 2 நீரிழிவை ஏற்படுத்தும் கூல்டிரிங்க்ஸ்... உயிர்க்கொல்லியான சர்க்கரைக்கு மாற்று என்ன? |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.