சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. ’மங்கத்தா’ படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் அஜித்குமாருடன் அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து புதுமையான கூட்டணியை உருவாக்கியதால் பலரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 'விடாமுயற்சி' திரைப்படமானது நேற்று (பிப்.06) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி ரிலீஸை ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. நேற்று (பிப்.06) மொத்தமாக ஐந்து காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. தமிழ்நாட்டில் திரையிடப்படுவதற்கு முன்பே கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் காலை 6 மணி முதலே விடாமுயற்சி திரையிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 1000 திரையரங்குகளில் விடாமுயற்சி வெளியிடப்பட்டுள்ளது.
‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. வழக்கமான தமிழ் படங்களில் இருக்கும் எந்த கமர்ஷியல் அம்சமும் இல்லை. படம் மிக மெதுவாக நகர்கிறது போன்ற எதிர்மறையான விமர்சனங்களும் ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம், அதகளமான சண்டை காட்சிகள், அஜித், த்ரிஷாவின் அருமையான நடிப்பு என பாசிட்டிவான விமர்சனங்களுமால மாறி மாறி வருகின்றன.
#Vidaamuyarchi #AK 's Highest Premiere in North America $373K 🔥
— Ramesh Bala (@rameshlaus) February 6, 2025
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, விடாமுயற்சி திரைப்படம் இந்திய அளவில் 22 கோடியும் தமிழ்நாட்டில் மட்டும் 21.5கோடியும் வசூல் செய்துள்ளது. உலகளவில் 30கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அஜித்தின் முந்தைய படங்களான துணிவு மற்றும் வலிமை ஆகியவற்றின் முதல் நாள் வசூலை விட குறைவு. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் துணிவு 23 கோடியும், வலிமை 31 கோடியும் வசூல் செய்திருந்தது. மேலும் விடாமுயற்சி முதல் நாளில் மட்டும் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக முதல் வசூலை வெளியிடவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக வட அமெரிக்காவில் அஜித் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக விடாமுயற்சி மாறியுள்ளது. வட அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் இந்திய மதிப்பிற்கு 3.26கோடி வரை வசூல் செய்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் இவ்வளவு குறைவான வசூல் செய்ததற்கு காரணம் பண்டிகை விடுமுறை நாட்களில் வெளியாகததுதான் என கூறப்படுகிறது. மேலும் இந்த வார இறுதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம், வசூல் அதிகரிக்கலாம் என திரை வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஏ ஆர் ரகுமானோடு ’ஊர்வசி‘ பாடலை மேடையிலேயே ரீமிக்ஸ் செய்த பாப் பாடகர் எட் ஷீரன்
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம், பிரேக்டவுண் எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல் என ரசிகர்களிடையே கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்ட இப்படம் சவால் நிறைந்த படப்பிடிப்பு சிக்கல்கள், கதையின் உரிமம் தொடர்பான சிக்கல் என பல்வேறு தடைகளை கடந்து இன்று வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கிறது.