கோயம்புத்தூர்: தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாபெரும் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்ட விவசாய சங்கத்த தலைவர் நாராயணசாமி நாயுடு என தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள மறைந்த விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் அவரது 100-வது பிறந்து நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று (பிப்.6) செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “வையம் பாளையம் எனும் சிற்றூரில் பிறந்த நாராயணசாமி நாயுடு இன்றைக்கு நம்முடைய இதயத்தில் நீங்கா இடம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றைய தினம் அவருக்கு 100வது பிறந்த நாள். அந்த வகையில், திமுக மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர் நாராயணசாமி நாயுடு.
முதலில் வட்ட அளவில் தொடங்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு அதன் பிறகு தன்னுடைய ஆளுமை திறனால் இந்தியா முழுவதும் விவசாய அமைப்புகள் தொடங்க பாடுபட்டவர். விவசாய பெருமக்களை ஒன்று திரட்டி பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்து, அது நிறைவேற பாடுபட்டவர். சில திட்டங்கள் நிறைவெறும் போது, அவர் இல்லாத ஏக்கம் விவசாயிகளிடம் உள்ளது. குறிப்பாக இலவச மின்சார திட்டம். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1989-ம் ஆண்டு 3வது முறையாக பொறுப்பேற்ற போது, நாராயணசாமி நாயுடு கோரிக்கையை நிறைவேற்றி தந்தார்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 100வது பிறந்தநாளினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் வையம்பாளையம் கிராமத்தில் செய்தி- மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமையப் பெற்றுள்ள உழவர் பெருந்தலைவர் சி நாராயணசாமி நாயுடு அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாண்புமிகு… pic.twitter.com/fpDBjHggJz
— M.P.Saminathan (@mp_saminathan) February 6, 2025
இதையும் படிங்க: சொத்து பிரச்சனை: வீட்டை இடித்த அண்ணன் மகன்.. கதறும் முதியவர்!
அதே போல 5-வது முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்ற போது ரூ.7000 கோடியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்காக பாடுபட்ட நாராயணசாமி நாயுடுவின் கோரிக்கைகள், கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி தந்துள்ளது. நாராயணசாமி நாயுடு திமுகவோடு கூட்டணி அமைத்து களம் கண்டவர் ஆவார். நேற்று இப்பகுதி மக்கள், நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று துடியலூர் - கோவில்பாளையம் இணைப்புச்சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் அவரது நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். மேலும் சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.