மதுரை: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போன்று, மதுரையைச் சுற்றி தமிழி எழுத்துக்களைக் கொண்டுள்ள மலைகளை உள்ளடக்கிய பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட தொன்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனத் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.
'தமிழிசூழ் மாமதுரை’:
'பாரம்பரிய ஸ்தலங்களின் நண்பர்கள்' (Friends of Heritage Sites - FOHS) என்ற அமைப்பின் சார்பாக மதுரை மாங்குளம் மீனாட்சிபுரம் மலையில் உள்ள மிகப் பழமையான தமிழிக் கல்வெட்டுகள் குறித்த 'தமிழிசூழ் மாமதுரை' என்ற ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, அரவிந்த் மருத்துவமனையின் லைகோ அரங்கத்தில் நேற்று (பிப்.11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரியத் தலங்களின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ரமா வரவேற்பு உரையாற்றினார். மேலும், பாறை ஓவியங்களின் ஆய்வாளர் காந்திராஜன், எழுத்தாளர் சுப்பாராவ், தொல்லிய அறிஞர் வெ.வேதாசலம், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பாரம்பரியத் தலங்களின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சர்மிளா தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“மதுரையை பாதுகாக்கப்பட்ட தொன்மை மண்டலமாக்குக”:
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தமிழ்த் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த சிறப்பு நேர்காணலில், “தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல், மதுரையைச் சுற்றி தமிழி எழுத்துக்களைக் கொண்டுள்ள மலைகளை உள்ளடக்கிய பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட தொன்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இது மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Watch now on Youtube தமிழிசூழ் மாமதுரை: வலம் 1 மாங்குளம் - Trailerhttps://t.co/92OnrWYn7S
— Friends of Heritage Sites (@FoHSofficial) February 9, 2025
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தமிழி எழுத்துக்களின் மலைகளைக் கொண்ட இடம் மதுரை. அதனால் தான் இந்தக் குறும்படத்திற்கு 'தமிழி சூழ் மாமதுரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போதிலிருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் எழுத்தோடு உள்ள ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந்தான் என்பது இந்தியாவில் வேறு யாருக்கும் இல்லாத பெருமையாகும். ஆகையால், இதனைப் பாதுகாப்பது என்பது முதற்கடமையாக உள்ளது. இந்த தகவலை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது அதைவிட மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த முயற்சியை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
“உலகின் தொன்மையான மொழி”:
இதையடுத்து பேசிய பாறை ஓவியங்களின் ஆய்வாளர் காந்திராஜன், “தமிழ் மொழி தமிழர்களின் அடையாளம் ஆகும். தமிழ் மொழியின் வலிமை அதன் எழுத்துக்கள். இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும், மிகத் தொன்மையான எழுத்துருவம் கொண்டது தமிழ் மொழி தான். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு எழுத்துருவாக்கம் செய்து தமிழகம் மட்டுமன்றி, எகிப்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்த எழுத்துருவைத் தமிழர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழி எழுத்துக்களின் சிறப்பு:
அது போன்ற தமிழி எழுத்துக்கள் பாறைகளில், பனை ஓலைகள், பானைகள், காசுகள் ஆகியவற்றிலெல்லாம் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட எழுத்துக்களை ஆவணப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குகைகளில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மதுரையைச் சுற்றி 15 மலைக் குன்றுகளில் தமிழி எழுத்துக்கள் காணப்படுகின்றன.
Unveiling of our one-of-it's-kind, first-in-it's-series documentary on " தமிழி சூழ் மாமதுரை", led by our honorary member thiru karu palaniappan(film director) on tuesday 11 february 2025. we request your gracious presence for this milestone event. pic.twitter.com/hsAsKzq6Hb
— Friends of Heritage Sites (@FoHSofficial) February 9, 2025
மதுரை நகரமே தமிழி எழுத்துக்களால் சூழப்பட்டுள்ளது. இந்த தமிழிக் கல்வெட்டு கடந்த 1882ஆம் ஆண்டு ராபர்ட் சீவல் என்ற வெள்ளையரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் அவர் கண்டறிந்த மாங்குளம் மீனாட்சிபுரம் மலையிலிருந்து ஆவணமாக்கும் பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். 140 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் கூட, மதுரை மக்களுக்கே கூட அது தெரியப்படுத்தப்படாத நிலை உள்ளது.
இதனால், இந்த குகைகள் பல்வேறு சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் அழிவுக்கு ஆளாகின்றன. ஆகையால், அவற்றைக் காப்பாற்ற வேண்டுமெனில் மக்களிடம் இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
“அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்”:
'பாரம்பரிய தலங்களின் நண்பர்கள்' அமைப்பின் தலைவர் சர்மிளா தேவதாஸ் கூறுகையில், “இன்றைக்குப் புராணங்களையே வரலாறாக மாற்றிக் கொண்டிருக்கும் சூழலில், உண்மையான ஆதாரப்பூர்வமான தொல்லியல் அடிப்படையிலான வரலாற்றை வருகின்ற தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இந்த முயற்சியின் நோக்கம். அந்த முயற்சியில்தான் துறை சார்ந்த ஆய்வாளர்கள், வல்லுநர்களோடு இணைந்து பயணம் மேற்கொள்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கும் அணியா? - சர்ச்சையைக் கிளப்பிய தவெக அறிக்கை!
அரசு அருங்காட்சியகம் ஊக்கம் தரும்:
அதைத் தொடர்ந்து பேசிய மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன், “மாங்குளம் மீனாட்சிபுரம் கல்வெட்டு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது. இந்த மலைகள் ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் முன்னெடுப்பாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம்.
இம்முயற்சியானது தொடர்ச்சியாக மதுரையைச் சுற்றியுள்ள 15 குன்றுகள், தலங்கள், குறிப்பாக யாப்பருங்கலக்காரிகையில் எனக் குறிப்பிடக்கூடிய எண்பெருங்குன்றங்களில் இன்று இருக்கக்கூடிய அனைத்தையும் முறைப்படியாகத் தொகுத்து ஆவணமாக வெளியிடும்பட்சத்தில் எதிர்கால தலைமுறைக்குத் தமிழர்களின் பண்பாட்டைக் கடைசி வரை கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும். இது தொடர்பான எந்த ஒரு பணியாக இருந்தாலும் அரசு அருங்காட்சியகம் அதற்கு பின்புலமாக இருந்து ஊக்கம் அளிக்கும்” எனத் தெரிவித்தார்.