சென்னை: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தேர்தல் வியூகத்துக்கான பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக (பிப்.10, பிப்.11) தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கட்சி உட்கட்டமைப்பு குறித்துச் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் நிர்வாகி ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் தவெக தலைவர் விஜய் தலைமையில் தேர்தல் வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் கட்சியில் அமைக்கப்பட்டுள்ள அணிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டவிதிகள் குறித்த அறிக்கை ஒன்றை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப அணி, குழந்தைகள் அணி, விவசாயிகள் அணி என 28 பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்:
- தகவல் தொழில்நுட்பப் பிரிவு.
- வழக்கறிஞர் பிரிவு
- ஊடகப் பிரிவு.
- பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு.
- பயிற்சி மற்றும் பணியாளர் மேம்பாட்டுப் பிரிவு.
- உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு.
- காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு.
- வரலாற்றுத் தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு.
- திருநங்கைகள் பிரிவு.
- மாற்றுத்திறனாளிகள் பிரிவு.
- இளைஞர் பிரிவு.
- மாணவர் பிரிவு.
- பெண்கள் பிரிவு.
- இளம் பெண்கள் பிரிவு.
- குழந்தைகள் பிரிவு.
- பணியாளர் பிரிவு.
- வர்த்தகர்கள் பிரிவு.
- மீனவர் பிரிவு.
- நெசவாளர்கள் பிரிவு.
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு.
- தொழிலாளர்கள் பிரிவு.
- தொழில்முனைவோர் பிரிவு.
- இந்தியாவில் வசிக்காதவர்கள் பிரிவு.
- மருத்துவர்கள் பிரிவு.
- விவசாயிகள் பிரிவு.
- கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு.
- தன்னார்வலர்கள் பிரிவு.
- AITVMI அனைத்திந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்.
இதையும் படிங்க: 2-வது நாளாகத் தொடரும் ஆலோசனை... பிரசாந்த் கிஷோருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
இந்த பிரிவுகளில் குழந்தைகள் அணி இடம்பெற்றுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியானது குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் அணியாகச் செயல்படும் எனவும், 18 வயதுக்குட்பட்ட யாரும் அந்த அணியில் இடம்பெற மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.