வேலூர்: ஓடும் ரயிலில் இருந்து நான்கு மாத கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இளைஞர் ஒருவர் இந்த குற்றச் செயலை செய்ததாக கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அது குறித்து கேட்டறிந்தனர். அதில், கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு (பிப்ரவரி 6) 9.00 மணியளவில், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி
இந்நிலையில், அந்த ரயில் ஜோலார்பேட்டை வந்த போது இளைஞர் ஒருவர் பெண்களுக்கான பிரத்யேகப் பெட்டியில் ஏறியுள்ளார். அதைப் பார்த்த கர்ப்பிணி, அந்த நபரிடம் இந்த பெட்டி பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டி என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண் கேள்வியெழுப்பியதால், வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.
இந்நிலையில், அந்த கர்ப்பிணி தனது இருக்கையிலிருந்து எழுந்து ரயிலில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அதைப்பார்த்த இளைஞர், பெண்ணை பின் தொடர்ந்து கழிவறைக்கு அருகே இருக்கும் ரயில் பெட்டியின் வாசல் அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்த இளைஞர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், ரயிலில் கத்தி கூச்சலிட்ட அவரை கர்ப்பிணி என்றும் பாராமல், கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது அந்த நபர் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது எப்படி? குழந்தைகள் உரிமை ஆர்வலர் பிரத்யேக பேட்டி! |
இதில் ரயில் பாதையில் கீழே விழுந்த அந்த பெண் வலி தாங்க முடியாமல் அலறியதைக் கண்ட அப்பகுதி மக்கள், பலத்த காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு, உடனடியாக கே.வி குப்பம் காவல்துறையினருக்கும், 108 அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
தொடர்ந்து கே.வி.குப்பம் மருத்துவமனையில் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரும், கே.வி.குப்பம் காவல் துறையினரும் இணைந்து தேடினர். மேலும், ரயில்வே குற்றப்பதிவேட்டில் இருந்த புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டியதில், அதில் ஹேமராஜ் என்பவரை அடையாளம் காட்டினார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்பு
அதன்படி, கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜ், 2022-ஆம் ஆண்டில் ரயில் நிலையங்களில் செல்போன் பறிப்பு, ரயில் பயணிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதும், தற்போது பிணையில் வெளியே இருப்பதும் தெரியவந்தது.
![கைது செய்யப்பட்ட ஹேமராஜ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23491094_train.jpg)
இதனையடுத்து கண்காணிப்பு கேமராப் பதிவுகளைக் கொண்டு ஹேமராஜை நோட்டமிட்ட காவல்துறை, அவர் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு செல்லும் வழியில் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், ஹேமராஜை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் குற்றம் எண் 18/2025-இல் 115/2 பிரிவின்படி காயம் ஏற்படுத்துதல், பாலியல் வன்கொடுமை (பிரிவு - 64), குற்றம் என்று தெரிந்தே குற்றம் செய்வது (பிரிவு - 62), பெண்ணை அவமதித்து பலத்தை பயன்படுத்தி குற்றம் செய்தல் (பிரிவு - 74), கொலை செய்ய முயற்சி (பிரிவு - 109/1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினரும், கே.வி.குப்பம் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.