மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாகக் கூறி, சிலர் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 4 பேரையும் கடந்த 28ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக கிழக்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் செய்யூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி, திமுக பிரமுகர் விஜயகுமாருக்கும், இந்த வழக்கிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை எனக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.