சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக 84 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்தியா சார்பாக கலந்து கொண்ட தமிழக வீரர் வீராங்கனைகள் 4 பக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாரியப்பன் தங்கவேலு பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) அதில், பேட்மிட்டன் போட்டியில் மூன்று பதக்கங்களும், உயரம் தாண்டுதல் போட்டியில் ஒரு பதக்கமும் வென்று தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து 3-ஆவது முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.
இந்த நிலையில், போட்டி முடிந்து பதக்கம் வென்ற வீரர்கள் தாயகம் திரும்பினர். அந்த வகையில், தமிழ்நாடு திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் விளையாட்டுத் துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: "தங்கத்தை தவறவிட்டது வருத்தம் தான்.. இருந்தாலும் வெண்கலமும் எங்களுக்கு போதும்"- மாரியப்பனின் தாய் பேட்டி!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் தங்கவேலு, "தொடர்ந்து 3 முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளேன். தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று முறையும் பதக்கம் வென்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த முறை மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என உறுதியாக இருந்தேன். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாகத் தங்கப்பதக்கம் வெல்ல முடியவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசு, தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பயிற்சியாளர்கள் எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தனர். அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி.
மேலும், நான் கடந்த 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிகில் பங்கேற்கும் பொழுது தமிழகத்தில் அதிகமானோருக்கு பாராலிம்பிக் பற்றி விழிப்புணர்வு இல்லை. ஆனால், தற்போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவருக்கும் ஊக்கமும், உதவியும் அளித்து எங்களை பாராலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்திலிருந்து சென்ற 4 பேரும் பதக்கங்களை வென்றுள்ளோம். கடந்த முறையே அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் கேட்டிருந்தேன். அதையும் கொடுப்பதாக நம்பிக்கை அளித்துள்ளனர்.
எங்களைப் பார்த்து தமிழகத்திலிருந்து அதிகப்படியான வீரர், வீராங்கனைகள் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகின்றனர். இந்தியா சார்பாகப் பங்கேற்றவர்கள் 29 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 4 பதக்கங்கள் வென்றுள்ளோம். அடுத்தடுத்து வரும் பாராலிம்பிகில் இந்தியா நம்பர் 1 நாடாக வரும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.