கோட்டா(ராஜஸ்தான்): பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இந்தியாவின் பெரிய நுழைவு தேர்வான 2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி முதல் அமர்வு தேர்வு ஜனவரி 22ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும். பிஇ, பிடெக் படிப்புகளுக்கான தாள் ஒன்று தேர்வு ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. பிஆர்க், பிபிளானிங் படிப்புகளுக்கான தாள் 2 தேர்வு ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும்
இது குறித்து பேசிய ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசகர் அமித் அகுஜா,"பிஇ, பிடெக் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு வரும் ஜனவரி 22, 23, 24, 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறும். தினமும் இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும். முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும்
பிஆர்க், பிபிளானிங் ஆகியவற்றுக்கான தேர்வு ஜனவரி 30ஆம் தேதி பிற்பகல் ஒரே ஒரு ஷிப்ட் ஆக நடைபெறும். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நகரம் குறித்த தகவல் விரைவில் அனுப்பப்படும் என தெரிகிறது. தேர்வுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னாக தேர்வு அனுமதி அட்டைகளும் அனுப்பப்படும். இந்த ஆண்டு 13.96 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஜனவரி மாதத்தில் நடைபெறும் ஜேஇஇ நுழைவு தேர்வுக்காக பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விடவும் 1.75 லட்சம் மாணவர்கள் கூடுதலாக இந்த முறை விண்ணப்பித்துள்ளனர்,"என்று கூறினார்.
இதையும் படிங்க: பஞ்சாப் அரசிடம் சமரச போக்கு இல்லை....உச்ச நீதிமன்றம் விமர்சனம்!
தாள் ஒன்றில் பல்வேறு விடைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யக் கூடிய கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். எண்கள் மதிப்பீடு அடிப்படையிலான கேள்விகளாகவும் இருக்கும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. தாள் இரண்டு, இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். தாள் 2ஏ என்பது பிஆர்க் நுழைவு தேர்வாகவும், தாள் 2பி என்பது பிபிளானிங் நுழைவு தேர்வாகவும் இருக்கும்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்கள், என்ஐடிக்களில் மாணவர் சேர்க்கைக்காக இந்த நுழைவு தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த நுழைவு தேர்வு இந்த ஆண்டு ஜனவரியில் முதல் முறையும், ஏப்ரல் மாதம் இரண்டாவது முறையும் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதில் ஏதேனும் ஒருமுறை தேர்வு எழுதினால் போதுமானது. இரண்டு முறையும் ஜேஇஇ நுழைவு தேர்வில் பங்கேற்றாலும், எந்த தேர்வில் மதிப்பெண் அதிகமோ அதுவே மாணவர் சேர்க்கையின்போது கவனத்தில் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை மாணவர்கள் பின்தொடர வேண்டும்.