தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண் சாலைகள் 5 கி.மீ. தொலைவிற்கு நேராக உள்ளது?” - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி! - Rekla race issue - REKLA RACE ISSUE

Rekla race issue: மாட்டுவண்டி பந்தயத்தை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் சில விதிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு உள்துறை செயலரும், தமிழ்நாடு காவல்துறை தலைவரும் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Rekla race issue
Rekla race issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 6:53 PM IST

மதுரை:மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கும் நோக்கில், பாரம்பரிய வீர விளையாட்டுகளை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறோம். கடந்த மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை தலைவர், மாட்டுவண்டி பந்தயங்களை நடத்துவது தொடர்பாக விதிகளை உருவாக்கி, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவற்றில், மாட்டுவண்டி பந்தயத்தை நடத்துவதற்கு முன்பாக கால்நடைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தடையில்லாச் சான்றைப் பெற வேண்டும். மாட்டு வண்டியின் உறுதித்தன்மை தொடர்பான சான்றிதழைப் பெற வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விதிகளை உருவாக்க தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அதிகாரம் இல்லை. விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதே காவல்துறையின் பணி. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, மாட்டுவண்டி பந்தயத்தை நடத்துவது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை தலைவரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் 1, 7, 8, 13, 14, 15, 16, 17 மற்றும் 22 ஆகிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மாட்டுவண்டி பந்தயத்தை நடத்தக்கூடாது. 5 கிலோ மீட்டருக்கு உள்ளாக உள்ளூர் பகுதியில் நடத்திக் கொள்ள வேண்டும் என விதியில் கூறப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண் சாலைகள் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நேராக உள்ளது” என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, “சில விதிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளன. சில விதிகள் ஏற்கத்தக்கதாக அல்ல. ஆகவே, தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு” வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, ஏற்கனவே உள்ள அரசாணையின் அடிப்படையில் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி வழங்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: குகேஷை கண்காணிக்க சிறப்பு குழு... பயிற்சி முறைகள் என்ன? - பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னாவின் பிரேத்யேக பேட்டி! - Vishnu Prasanna

ABOUT THE AUTHOR

...view details