சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 2017ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.
இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து உரிமை மீறல் குழு, திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.