ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான தில் ராஜுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் ’புஷ்பா 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் எர்னேனி, செர்ரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தயாரிப்பாளர்களின் இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ மற்றும் விஜய் நடிப்பில் 2023இல் வெளியான ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு. அதே போல அஜித்குமார் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரான தில் ராஜு, ஆரம்பத்தில் விநியோகஸ்தராக இருந்து பின்னர் படிப்படியாக தயாரிப்பாளராக மாறியவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளின் விநியோக உரிமை இவரிடமே உள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபெளலி உள்பட 8 இடங்களில் உள்ள தில் ராஜுவின் வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் 55 அதிகாரிகள் அடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சந்தானம் நடிப்பில் 'DD Next Level' போஸ்டர்.. பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் ஆர்யா - சந்தானம் கூட்டணி
’கேம் சேஞ்சர்’, ’புஷ்பா 2’ போன்ற படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதாலும் அந்த படங்களின் வசூலும் அதிக அளவில் இருப்பதாலும் வருமான வரி ஏய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தில் ராஜு தயாரிப்பில் ’கேம் சேஞ்சர்’ மற்றும் ’சங்கராந்திகி வஸ்துன்னம்’ ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்தன. இதில் ’கேம் சேஞ்ச’ர் படமானது சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார் தில் ராஜு. மற்றொரு படமான ’சங்கராந்திகி வஸ்துன்னம்’ படமானது ரூ.30 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது. அதன் வசூல் தற்போது ரூ.160 கோடியை தாண்டியுள்ளதாக பட நிறுவனமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.