கரியாபந்த்: சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள மெயின்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, திங்கட்கிழமை நடந்த ஒரு மோதலில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு கோப்ரா படைச் சேர்ந்ந்த வீரர் காயமடைந்தார் என்று அதிகாரி கூறினார். மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), சத்தீஸ்கரை சேர்ந்த CoBRA மற்றும் ஒடிசாவை சேர்ந்த சிறப்பு நடவடிக்கை குழு (SOG) ஆகியவற்றின் கூட்டுப் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தின் எல்லையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள சத்தீஸ்கரின் குலாரிகாட் வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ஜனவரி 19 ஆம் தேதி இரவு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
திங்கட்கிழமை நடந்த இந்த நடவடிக்கையின் போது இரண்டு பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், மேலும் என்கவுன்ட்டர் இடத்தில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் நவீன துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். மாவோயிஸ்ட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
என்கவுன்ட்டரை உறுதிப்படுத்திய கரியாபந்த் காவல் கண்காணிப்பாளர் நிகில் ரகேச்சா, மெயின்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காடுகளில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது திங்கள்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவித்தார். "துப்பாக்கிச் சூடு நின்ற பிறகு, தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கோப்ரா வீரர் காயம் அடைந்தார். அவருக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது," என்று அந்த அதிகாரி கூறினார்.