சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்த அரசாணையை எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் கனகசபை மீது 25 பேர் நின்றால் நூறு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும், தீட்சிதர்கள் தவிர வேறு எவரும் கனகசபை மீது ஏற உரிமையில்லை என்றும் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உரிமை இல்லை என்று எப்படிக் கூற முடியும்? என்ன ஆதாரம் உள்ளது? என்று மனுதாரர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர். கடந்த 2023ஆம் ஆண்டு கோயிலில் நடந்த நிகழ்வைச் சுட்டிக் காட்டிய தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர், காவல் துறையினர் கோயிலுக்குள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியதாகப் புகார் தெரிவித்தனர்.