தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஸ் கிளப்பில் குளங்கள் அமைக்கும் பணியை நிறுத்த கோரிய வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - PONDS IN RACE CLUB

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 2:11 PM IST

சென்னை:கிண்டி ரேஸ் கிளப்பில், குதிரை பந்தய சுற்றுப்பாதை வழித்தடத்தின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இதனை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களை சீல் வைத்துள்ளது. இதனை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் சில பணிகளை மேற்கொண்டு வருவதால், கோல்ஃப் மைதானத்தை சேதபடுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கிளப் உறுப்பினர்கள், இந்த கோல்ஃப் மைதானத்தில் விளையாடி வந்ததாகவும், மைதானத்தை பராமரிக்க ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் செலவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் கிளப்ப்ஹவுஸ் கட்டியுள்ளதாகவும், அங்குள்ள சமையலறை, மனமகிழ் மன்றம், மதுபான பாரில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இந்த வசதிகளை 500 உறுப்பினர்கள் வரை வழக்கமாக பயன்படுத்தி வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ரூட்டு தல' மோதலால் மாணவர் கொலை! மேலும் மோதலை தடுக்க போலீஸ் உஷார்

நாட்டிலேயே பழமையான மூன்றாவது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 4ம் தேதி அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து, நீர்நிலை அமைப்பதற்காக தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த சேதத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜிம்கானா கிளப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், ஜேசிபி, டிராக்டர், புல்டோசர் போன்ற இயந்திரங்களைக் கொண்டு 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதாகவும் இதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சூழலில் அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், இதே கோரிக்கையுடன் உரிமையியல் வழக்கையும் ஜிம்கானா கிளப் தரப்பில் தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவுக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details