சென்னை: ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ’ஐயையோ’ பாடல் மூலம் இசை உலகில் அறிமுகமாகியுள்ளார். பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து லேசா லேசா, காக்க காக்க, சாமி, கஜினி, வாரணம் ஆயிரம், அந்தியன், அயன், உன்னாலே உன்னாலே, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஏழாம் அறிவு, அனேகன் என கணக்கில் அடங்காத ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஆவதற்கு முன் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களிடம் துணை இசைக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜ் கடைசியாக ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் இசையுலகில் அறிமுகமாகியுள்ளார். அவர் இசையமைத்த சூயாதீன ஆல்பம் பாடல் ‘ஐயையோ’ பாடலை think music நிறுவனம் தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த பாடலில் சாமுவேல் நிக்கோலஸ் நடித்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் தனது தந்தை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் கோரஸ் பாடகராக தனது இசைப் பயணத்தை தொடங்கியதாகவும், கார்த்தி நடித்த ’தேவ்’ படத்தில் ஒரு படல் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ’ஜயையோ’ பாடலுக்கு இசையமைத்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஐயையோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை பாணியில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட கூல் சுரேஷ்; வைரலாகும் வீடியோ! - COOL SURESH
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடகர் திப்பு பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் திப்புவின் மகன் சாய் அபயங்கர் தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரை போல ஹாரிஸ் ஜெயராஜ் மகனும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இரு இசை பிரபலங்களின் மகன்கள் ஒரே காலகட்டத்தில் இசைத்துறையில் அறிமுகமாக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.