ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆயுளை அதிகரிக்கவும் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு ஏற்ப உயிரை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்க உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அதற்கு அடிப்படையான விஷயம் உணவு தான். தினசரி நாம் சாப்பிடும் உணவில், ஆண்டி ஆக்சிடண்ட், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றதா என்பதை தெரிந்து தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் தட்டை பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிரப்புவதால், ஆரம்ப கால மரணத்தின் அபாயத்தை தவிர்க்கலாம் என்கிறது ஆய்வு.
அந்த வகையில், ஆப்பிள் முதல் பெர்ரிகள் வரை, ஆரஞ்சு முதல் பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகேடோ வரை, இந்த 7 பழங்கள் நாள்பட்ட நோய் அபாயத்தை குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஆரம்ப கால மரணத்தின் அபாயத்தை குறைக்கும் பழங்களின் பட்டியல் இதோ..
ஆப்பிள்: ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இவை கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவற்றில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவுகிறது. வாரத்திற்கு 3 முதல் 4 ஆப்பிள்களை உட்கொள்வது ஆரம்ப கால மரணத்தின் அபாயத்தை 39% குறைக்கும் என ஃபிரான்டியர்ஸ் ஆஃப் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பெர்ரிஸ்: புளுபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள அந்தோசயினின் (Anthocyanin) முதுமையை தாமதப்படுத்துகிறது. அதே போல, வைட்டமின் சி இதய ஆரோக்கியத்திற்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் பங்களிக்கிறது. பெர்ரிகளின் அடிக்கடி உணவில் சேர்த்து வர இதய நோய், புற்றுநோய் மற்றும் பிற நாட்பட்ட நிலைமைகளின் குறைவான அபாயத்துடன் தொடர்புடையது.
ஆரஞ்சு: வைட்டமின் சி சத்தால் நிறைந்துள்ள ஆரஞ்சு, உடலில் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை ஆதரிக்கிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதில் ஃபிளாவனாய்டுகளும் (Flavonoids) இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரத்த சர்க்கரை அளவை குறைக்க சப்பாத்தி செய்யும் போது இந்த பொடியையும் சேருங்கள்..நன்மைகள் ஏராளம்!
மாதுளை: பாலிபினால்களால் (polyphenols) நிறைந்த மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மாதுளை பழத்தின் சாறு அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும், இவை ஆரோக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் சரியான இதய செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சிறுநீரக கற்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
அவகேடோ: அவகேடோவில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்கிறது. பட்டர் ஃப்ரூட்ஸ் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன, மேலும் நீண்ட ஆயுளையும் மேம்படுத்துகிறது.
திராட்சை: முதுமையை தடுக்கும் பண்பான ரெஸ்வெராட்ரோல் திராட்சையில் உள்ளது. திராட்சையை வழக்கமாக உட்கொள்வது இதய நோய், அறிவாற்றல் குறைபாடு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 3 பழங்களுக்கு மேல் சாப்பிடுபவர்கள், குறைவாக உட்கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப கால மரண கணிசமாகக் குறைவாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 30 வயதில் தோல் சுருக்கம் பற்றிய பயமா? 20 வயதில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்பு!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.