மதுரை: கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அனுமதியின்றியும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றக் கோரிய வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உள்ள பொதுச் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சட்டவிரோத பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வளைவுகளில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவரது (திமுக) ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுமதி பெறாமல் பேனர்களை கும்பகோணம் நகர் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் நடைபாதைகளில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்” - மாணவிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்!
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று வைத்து உள்ளனர். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றிவிட்டோம். அதற்காக, சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விதிமீறல் பேனர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.