சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸ் (ART HOUSE) கலை கண்காட்சி மையத்தில் 'மாஸ்டர் விசயபுள்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24 தேதி தொடங்கிய ஓவியக் கண்காட்சி டிசம்பர் 28 வரை 5 நாட்களுக்கு இலவசமாக நடைபெறுகிறது.
தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், ஓவியர் திருநாவுக்கரசர் மற்றும் அவரது குழுவினர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், அப்ஸ்ட்ராக்(abstract art) , ஆயில் பெயின்டிங்(Oil painting), அக்ரிலிக்(acrylic painting), டிஜிட்டல்(digital painting), வாட்டர் கலர்(watercolor painting), லைன் ட்ராயிங் (line drawing) ஆகிய வரைபடங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரைபட கண்காட்சி குறித்து ஓவியர் திருநாவுக்கரசர் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "தங்களுடைய படைப்புகளை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது கலைஞருக்கான பணி. நான் ஓவியக் கலையை கடந்த 24 வருடங்களுக்கு முன்பிலிருந்து செய்து வருகிறேன். நாங்கள் பல்வேறு தாக்கங்களில் இருந்து பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளோம். நாங்கள் பார்த்தவற்றை பிரதிபலிக்கும் நோக்கில் வரைபடங்களை வரைந்துள்ளோம்.
பெண்ணியம் பேசும் ஓவியங்கள்:
வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரலிக் பெயிண்டிங் என்று பலவிதமான வகையில் ஓவியங்களை வரைந்துள்ளோம். நமக்கான கலைகளை அழகியல் ரீதியாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பேசும் பாரம்பரியமாக நடனமான பரதநாட்டியம் ஆடும் பெண்களை எனது பார்வையில் ஓவியமாக வரைந்துள்ளேன்.
வீணையுடன் நடன ஓவியம்:
ஒரு பெண் வீணையை வைத்துக்கொண்டு நடனம் ஆடுவது போன்று வரைந்துள்ள ஓவியத்தை ஓவியர் விஜயகாந்த் வரைந்துள்ளார். வீணையை வைத்து நடனமாட முடியாத என்பது தெரியும். ஆனால், வீணையின் ரிதத்தால் ஏற்படும் இசைக்கு ஒரு பெண் நடனமாடுவது போல் யோசித்து படத்தை வரைந்துள்ளது இந்த ஓவியத்தின் சிறப்பாகும்.
கிராம சூழலில் இருக்கக்கூடிய பறவைகள் மற்றும் விலங்குகளை நினைவு கூர்ந்து பதிவு செய்யும் வகையில் சேவல் ஓவியம் வரையபட்டுள்ளது. அதில், இருக்கக்கூடிய வண்ணங்கள் ஸ்வரம் போல அழகாக இருக்கும். இது வீரம், கோபம், பகட்டாக நிற்கக்கூடிய நிலை ஆகியவற்றை அற்புதமாக காட்டுகிறது. இதனை ஓவியர் பாரதிராஜா வரைந்துள்ளார்.
இதையும் படிங்க: சூரிய ஒளியால் கமலின் ஓவியத்தை வரைந்து அசத்தும் மயிலாடுதுறை இளைஞர்!
மனிதன் உருவாகிய போது, பேசுவதற்கு முன்பு தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட கருவி ஓவியம். குகை ஓவியம், பாறை ஓவியம் போன்ற படைப்புகளை முன்னதாகவே அவர்கள் படைத்துள்ளனர். மொழி உருவாவதற்கு காரணமாக இருந்ததே இந்த ஓவியங்கள் தான். அதன் பின்னர் தான் சத்தம் வந்தது, சத்தம் மொழியாக மாறி பேச ஆரம்பித்தார்கள். சோழர், பாண்டியர் காலத்தில் கட்டிடக்கலையுடன் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டது.
டிஜிட்டலா? ஓவியமா?
1857-ல் இந்தியாவில் school of art முதன் முதலாக சென்னை ஓவியக்கல்லூரியில் வந்தது. தற்போது இருக்கக்கூடிய காலங்களில் ஓவியக்கலை நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறது. உலகத்தில் அதிகபடியாக வேலை வாய்ப்புகள் இருக்கக்கூடியது கலை. மருத்துவத்துவம், ஆர்க்கிடெக்ட், இஸ்ரோ, கிராபிக்ஸ், சினிமா போன்ற துறைகளில் டிசைனராக அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. சினிமாத்துறை, நாடகத்துறையில் AI போன்ற செயலிகளில் படைப்பாளர் என்ற ஒருவர் தேவைப்படுகிறார்.
வரைபடத்தை விற்பது என்பது, ஒரு ஓவியர் அந்த படத்தை வரைவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்களைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. டிஜிட்டல் முறை வந்தாலும், அந்தந்த உழைப்பாளிகளுக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஓவியர் முதலில் சுவற்றில் வரைந்தார். தற்போது டிஜிட்டல் முறை வந்துள்ளது. ஆனால், ஓவியர்களும், சிற்பிகளும் தற்போது வரையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு கட்டாயம்:
ஓவியக்கல்லூரி மற்றும் கலை பண்பாடுத்துறை போன்ற இடங்களில், ஓவியம் குறித்த விழிப்புணர்வு பாடங்கள் எடுத்து வருகிறோம். மாணவர்கள் கண்காட்சிக்கு சென்று ஓவியங்களை பார்க்க வேண்டும். படத்தை எவ்வாறு வரைந்தார்கள் என்ற அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஆசிரியர்களை ஓவியக்கலை கற்றுத் தருவதற்கு நியமித்துள்ளார்கள். கல்லூரியில் சென்று கற்றுக் கொள்வதற்கு முன்னரே பள்ளிகளில் கற்றுக் கொண்டால் அவர்களுடைய படைப்புத்திறன் அதிகமாக இருக்கும்" என்றார்.