சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாணியில் கூல் சுரேஷ் சாட்டையால் அடித்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி தான் கல்லூரி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் நேற்று காலை கோவையில் தனது வீட்டின் முன்பு தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். இந்த விவகாரம் பெரிய அளவில் வைரலானது. மேலும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து திமுகவினர் பலர் அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். இதனிடையே நடிகரும், நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ், சென்னையில் அண்ணாமலையை கிண்டலடிப்பது போல் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். சமுத்திரகனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்த திரு.மாணிக்கம் திரைப்படம் நேற்று வெளியானது.
அப்படத்திற்கு விளம்பரம் செய்வது போல் போஸ்டரை வைத்து கொண்டு, தனது மேலாடை இல்லாமல் "திரு.மாணிக்கம், திரு.மாணிக்கம், திருப்பதி பிரதர்ஸ்" என தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டார். அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில், கூல் சுரேஷ் சாட்டையால் அடித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு இரவில் நடக்கும் கதை, 15 நிமிட சிங்கிள் ஷாட் - 'வீர தீர சூரன்' சுவாரஸ்யம் பகிர்ந்த இயக்குநர் அருண்குமார்! - VEERA DHEERA SOORAN
கூல் சுரேஷ், சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் முதல் ஒவ்வொரு நடிகரின் படம் வெளியாகும் போது திரையரங்குகளில் அப்படத்தின் கெட்டப்பை அணிந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்துடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் வெளியான போது குதிரையில் வந்த கூல் சுரேஷ், விஜய் நடித்த கோட் வெளியான போது ஆட்டை தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.