சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் மாநில அளவில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் மட்டுமே தேர்வு எழுதினார். அவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார்.
அப்பள்ளியில் இருந்து 68 பேர் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவர்களில் 5 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதிய 63 பேரில் 62 பேர் தேர்ச்சி பெற்று 98.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் திருநங்கை ஏ நிவேதா அறிவியல் பாடப்பிரிவு எடுத்துப் படித்து, 283 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு சமுதாய சூழலுக்கும் இடையே திருநங்கை மாணவி ஒருவர், மாநில அளவில் படித்து, வெற்றி பெற்றுள்ளதற்குப் பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இது குறித்து, ஈடிவி பாரத் செய்து நிறுவனத்திற்குத் திருநங்கை நிவேதா அளித்த சிறப்புப் பேட்டியில், “12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் ஒரே திருநங்கையாக, நான் படித்து தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்த எனது தாய் சாம்பவி, அதற்கு உதவியாக இருந்து அனுஸ்ரீ ஆகியோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், 4 வகுப்பு படிக்கும் போதே எனது உடலில் மாற்றங்களை ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் தொடர்ந்து 9ம் வகுப்பு வரையில் அதே பள்ளியில் மாணவர்களின் கிண்டலுக்கும் இடையே படித்து வந்தேன். ஆனால், 2018ம் ஆண்டு அந்தப் பள்ளியிலிருந்து படிப்பை நிறுத்தி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாம்பவியிடம் வந்து படிக்க வேண்டும் என கூறினேன்.
அவர்தான் என்னை சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று படிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்து பள்ளியில் படிக்க வைத்தார். இந்தப் பள்ளியில் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் படித்து முடித்துள்ளேன். நீட் தேர்வு எழுதி உள்ளேன். மாநில அளவில் ஒரே மாணவி என்பதால் எனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்கும். நான் மருத்துவம் படித்த பின்னர், திருநங்கை சமுதாயத்திற்கும், பொது மக்களுக்கும் சேவை செய்வேன்” என தெரிவித்தார்.