திருச்சி: திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் கள் இயக்கம் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.19) நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாயச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கள் இயக்கம் நல்லசாமி கூறும் போது, "தமிழக அரசு, கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கித் தேர்தல் அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதில் சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று நடத்துவதைப் போல விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.
இந்தியா என்பது விவசாய நாடு. விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியைப் பெருக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சனைகள் கோரிக்கை இடம் பெற வேண்டும் அப்படி இடம்பெற்றுப் பரிசீலித்தால் வாக்களிக்க ஏதுவாக இருக்கும்.
தமிழக அரசு 28 ஆண்டுக் கால சட்ட போராட்டத்தின் போது, சரியான இலக்கை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. தினமும் காவிரி நீர் பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த வழக்கைக் கொண்டு சென்று, அதற்கான தீர்ப்பைப் பெற்றிருந்தால், இரு மாநில உறவு கெடுவதற்கோ, மோதல் போக்குகள், இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவை கேள்விக் குறி ஆவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது.
தினமும் தண்ணீர் திறப்பு என்ற அம்சம், தீர்ப்பில் இடம் பெற்றிருந்தால், மேகதாதுவில் அணைக் கட்டும் எண்ணம் கர்நாடகாவுக்கு வந்திருக்காது. எனவே, தினமும் நதிநீர் பங்கீடு என்ற அம்சம் இருந்திருந்தால், இரண்டு மாநிலங்களுக்கும் சுமூகமான நிலை இருந்திருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ஒழிப்போம் என கூறவில்லை - அமைச்சர் முத்துசாமி