தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜபகர் அலியை வெட்டி கொன்றுள்ளனர்; இது விபத்து அல்ல' - ஹென்றி திஃபேன் பரபரப்பு குற்றச்சாட்டு! - JAGABAR ALI MURDER

கனிமவள மாஃபியாக்களால் ஜகபர் அலி வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என ஹென்றி திஃபேன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜகபர் அலி மரணம் குறித்து மக்கள் கண்காணிப்பாக நிர்வாக இயக்குநர் ஹென்றி திஃபேன் பேட்டியளித்தபோது எடுக்கப்பட்ட படம்
ஜகபர் அலி மரணம் குறித்து மக்கள் கண்காணிப்பாக நிர்வாக இயக்குநர் ஹென்றி திஃபேன் பேட்டியளித்தபோது எடுக்கப்பட்ட படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 9:03 PM IST

Updated : Jan 25, 2025, 10:36 PM IST

மதுரை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக பல புகார்களைக் கொடுத்து, அதை தடுக்க பல போராட்டங்களை நடத்தி வந்த அ.தி.மு.க., நிர்வாகி ஜகபர் அலி கனிமவளக் கொள்ளை கும்பலால் விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், இது விபத்தால் நடந்த கொலையல்ல; அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள் கண்காணிப்பகத்தில் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

இந்த பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து நமக்கு சிறப்புப் பேட்டியளித்த அவர், கனிமவள மாஃபியாக்களால் ஜகபர் அலி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்; தமிழ்நாடு அரசுக்கு சவால் விடும் அளவுக்கு கொடூரமான கும்பல் இது; சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன்; உறுதியாக சொல்கிறேன் இது வாகன விபத்து அல்ல என உறுதிபட கூறினார்.

அரசுக்கு சவால் விடும் மாஃபியா

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகபர் அலி வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர். தற்போது, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் சார்பாக மக்கள் கண்காணிப்பாக நிர்வாக இயக்குநர் ஹென்றி திஃபேன் திருமயம் பகுதிக்குச் சென்று மேற்கொண்ட ஆய்வு குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசுக்கு மிகக் கொடூரமான சவால் விடுகின்ற ஒரு கும்பல் இருக்கிறது என்றால் அது கனிமவள மாஃபியாக்கள் தான். அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் நிலையிலிருந்து கீழே சுரங்கத் துறை உதவி இயக்குநர் வரை காவல்துறையில் இருக்கக்கூடிய திருமயம் ஆய்வாளரிலிருந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துறை அமைச்சர் வரை இந்த மாஃபியாக்கள் தொடர்புகள் வைத்துள்ளனர்.

செயல்பட்டு வரும் ஆர்.ஆர் கிரெஷர்

உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வாயிலாக பல ஆணைகளை பெற்று தடையாணைகளும் பெற்று, இயங்கி வந்த ஒரு சுற்றுச்சூழல் மனித உரிமை காப்பாளரை கொலை செய்யக்கூடிய அளவிற்கு இந்த மாஃபியா கும்பல் துணிந்திருக்கிறது என்றால், இது பதவியில் இருக்கக்கூடியவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது. இது நான் நேற்று நேரடியாக அப்பகுதிக்குச் சென்று நான் கண்டறிந்த உண்மைகள் என்று கூற விரும்புகிறேன்.

மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் சார்பாக நேற்று (ஜனவரி 24) அங்கே சென்று, எந்த குற்றவாளிகள் இன்று சிறையில் இருக்கிறார்களோ அவர்களுடைய குவாரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டேன். கனிமவள சுரங்கத்துறை உதவி இயக்குநர் எந்த குவாரியை ஆய்வு செய்தார்களோ அந்தக் குவாரிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன.

நேற்றைய தினமும் அந்த ஆர்.ஆர் கிரெஷர் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். யாரும் அவர்களை தொட முடியாது என்ற திமிருடன் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த திமிரின் விளைவாக அந்த திமிரால் வளர்ந்த சதியின் காரணமாக ஏற்பட்டிருக்க கூடிய இந்த கொலை தான் விபத்து என்று கருதப்பட்டு ஜாபர் அலி உடைய இறப்பு விபத்து என்று பேசப்படுகிறது.

வெட்டி படுகொலை

நான் உறுதியாகக் கூறுகிறேன் இது வாகன விபத்து அல்ல. வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட காரணத்தினால் சம்பவம் முடிந்தவுடன் காவல்துறை ஆய்வாளருடைய நேரடி பாதுகாப்பின் கீழ் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக அந்த ஜாபர் அலியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கக்கூடிய மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், திருமயத்திலேயே உடலைப் பதப்படுத்தி வைப்பதற்கு இடமில்லாத ஓர் இடத்திற்கு கொண்டு போய் வைத்து தடயவியல் மருத்துவம் தெரியாத ஒரு எலும்பு முறிவு மருத்துவரின் வாயிலாக 20 மணி நேரத்திற்குப் பிறகு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை இப்போது வரை ஜாபர் அலியின் குடும்பத்திற்கு கொடுக்கவில்லை.

கூட்டு சதி

இதில் அனைவருக்கும் பங்குள்ளது. அதில் மருத்துவர்களின் பங்கும் உள்ளது என்பதை வருத்தத்தோடும் தலைக்குனிவோடும் கூறுகிறேன். காரணம் இது உயர் நீதிமன்றத்தின் கண்ணுக்கு கீழே நடந்திருக்கக்கூடிய ஒரு கொடூரமான கொலை. இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் மூட வேண்டும் என்று ஆணையிட்ட அதே நீதிமன்றம், தானாக முன்வந்து சாத்தான்குளம் வழக்கில் நிகழ்ந்ததை தவறு என்று புரிந்து கொண்டு அந்த வழக்கை சுயமோட்டோவாக எடுத்தது போன்று ஜகபருடைய கொலை வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய மதுரை அமர்வு எடுக்க வேண்டும் என நீதிபதிகளுடைய மனசாட்சியை நான் இந்த நேரத்தில் முதலில் தொழுகிறேன்.

ஆட்சியாளர்களிடம் பேச நான் தயார் இல்லை. எல்லா ஆட்சியாளர்களுக்கும் இதில் பங்கு இருக்கின்ற காரணத்தினால், அதைத் தாண்டி நான் பேச விரும்புகிறேன். நீதிமன்றத்தினுடைய மனசாட்சிக்கு நான் பேச விரும்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கின்ற அக்கறையில் உள்ள நீதிபதிகளுக்கு நான் அறைக்கூவல் விடுக்கிறேன்.

நீதிமன்றதால் மட்டுமே தீர்வு

அங்குள்ள ஒரு நீர் நிலையில் தான் இந்த குவாரி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குள் நீங்கள் யாரும் நடக்க முடியாது என்ற சவாலைத் தான் நீதிபதிகள் முன் நான் வைக்கிறேன். இவ்வாறு நான் சொல்ல காரணம், நீதிமன்றம் மட்டும் தான் இந்த பிரச்னைக்கு முன் வந்து நீதியை நிலை நாட்ட முடியும் என நம்புகிறேன். இதற்காக நீதிமன்றத்திற்கு எப்போதும் உதவ நான் தயாராக இருக்கிறேன்.

இரண்டாவதாக அரசு முன்வந்து தலையீடு செய்து ஜகபர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு உடனடியாக அறிவிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கை மாற்றுவதன் மூலம் ஒன்றும் நடைபெறாது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் மாடியில் காவல் நிலைய ஆய்வாளர் குற்றவாளிகளின் வழக்கறிஞர்களுடன் பல மணி நேரம் உரையாடல்கள் நடைபெற்றுள்ளன என்பதை இந்த நேரத்தில் வெளிப்படையாக கூற விரும்புகிறேன்.

சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும்

ஆகவே, சி.பி.சி.ஐ.டி., வருவதன் மூலமாக எதுவும் மாறாது. மனசாட்சி உள்ள சிறப்பு புலனாய்வு குழுவை தமிழ்நாடு அரசே நியமிக்க வேண்டும். தமிழக அரசே நீதிமன்றத்திற்கு சென்று அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க உறுதி அளிக்க வேண்டும்.

உயர் நிலையில் இருக்கக்கூடிய நேர்மையான புலனாய்வு குழு அதிகாரியின் தலைமையில் இந்த விசாரணை நடைபெற வேண்டும். அந்த மாவட்டத்தில் பணியாற்றிய முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பதில் சொல்ல கடமைப்பட்டவராவார்.

ஏனென்றால் அவருடைய காலகட்டத்தில் தான் இந்த சம்பவங்களுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஆகையால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரியாமல் காவல் நிலைய ஆய்வாளர் நிச்சயம் இவற்றையெல்லாம் செய்திருக்க முடியாது. மாவட்ட ஆட்சியருக்கும் சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கும் கூட நேரடி தொடர்பு இருக்கிறது.

வருவாய்த் துறை அலுவலர்கள் இவர்களின் இந்த பணிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜாஃபர் அலியின் கொலை வழக்கில் இந்த அதிகாரிகளின் பெயர்களையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இது ஒரு முன்மாதிரியான வழக்காக இருக்க வேண்டுமானால் முன்மாதிரியான விசாரணையாக இது நடைபெற வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Last Updated : Jan 25, 2025, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details