தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நன்னீர் ஏரியை கழிவு நீர் ஏரியாக மாற்றுகிறதா கோவை மாநகராட்சி?-மக்களின் அச்சத்துக்கு விளக்கம் அளித்த அதிகாரி! - CHINNAVEDAMPATTI LAKE ISSUE

நன்னீர் ஏரியை கழிவு நீர் ஏரியாக மாற்றும் மாநகராட்சியின் திட்டத்திற்கு சின்னவேடம்பட்டி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சின்னவேடம்பட்டி ஏரி
சின்னவேடம்பட்டி ஏரி (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 8:20 PM IST

கோவை:நன்னீர் ஏரியை கழிவு நீர் ஏரியாக மாற்றும் மாநகராட்சியின் திட்டத்திற்கு சின்னவேடம்பட்டி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியில் 200 ஏக்கர் நிலத்தை நன்னீர் சேமிக்கும் ஏரியாக 1991ல் அரசு மாற்றியது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளான மாங்கரை, தடாகம் பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் கணுவாய் தடுப்பணை, ராஜவாய்க்கால் வழியே சுமார் 8 கிமீ பயணித்து இந்த ஏரியை வந்தடையும் வண்ணம் இந்த ஏரியின் பாதைகள் அமையப்பெற்றுள்ளது. ஆனால் கால போக்கில் பராமரிப்பு இல்லாததால் ஏரி வறண்டு காணப்பட்டது. மேலும் அதன் நீர் வழி பாதைகளும் தடை பட்டது.

மகிழ்ச்சி தந்த முதல்வர் அறிவிப்பு:இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட களப்பணியால் ஏரி தூர் வாரப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த மழைப்பொழிவினாலும் இந்த எரியானது நிரம்பியது. இதனால் பல ஆண்டுகள் கழித்து அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டது. இது சின்னவேடம்பட்டி ஏரி பாதுக்காப்பு அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தின் கீழ் சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

சின்னவேடம்பட்டி ஏரி (Image credits-Etv Bharat Tamilnadu)

அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வில்லை காரணம் ஏரிக்குள் நன்னீரை நிரப்புவதற்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்புவதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவு நீரை, சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் சுத்திகரித்து, பின்னர் அந்த நீரை சின்னவேடம்பட்டி ஏரிக்குள் நிரப்புவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர் மாசு அடையும் என்பதால் குடிநீர் விவசாயம் கேள்விக்குள்ளாகும் என சின்னவேடம்பட்டி ஏரியை புணரமைத்தவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் செயலாளர் விஜய் கூறுகையில்,"கோவையின் வடக்குப் பகுதியில், நன்னீர் நிரப்பும் ஏரியாக சின்னவேடம்பட்டி மட்டுமே உள்ளது. கணுவாய், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, அம்மன் நகர், கணபதி, நவ இந்தியா, பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைக் காக்க வெள்ள நீர் வடிகாலாகவும் இந்த ஏரி உள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டுதான் ஏரிக்குத் தண்ணீர் வந்தது. தற்போது ஏரிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்த நோக்கத்துக்காக ஏரி உருவாக்கப்பட்டதோ, அதற்கு நேரெதிரான திட்டம் இது.

தண்ணீர் மாசடையும்:ஏற்கெனவே கோவை மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில், இவர்களால் சுத்திகரிப்பு நீர் எந்த தரத்தில் இருக்கும், அது என்னென்ன பாதகங்களை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் நினைத்து பார்க்க முடியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் இந்த ஏரியில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் மழை பெய்த போது சுமார் 40% அளவிற்கு தண்ணீர் நிறைந்தது. மேலும் இனி வரும் காலங்களில் அதிகப்படியான நீர் இந்த ஏரிக்கு வரும் இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை இந்த ஏரியில் கொண்டு விட நடவடிக்கை கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

விஜய், கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு (Image credits-Etv Bharat Tamilnadu)

அதாவது கழிவு நீரை சுத்திகரித்து எங்கு தேக்கினாலும் மீண்டும் அந்த நீரானது மாசடைந்து மீண்டும் கழிவு நேராகவே மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை ஓடும் நீரோடையில் விட வேண்டும். இங்கு அந்த நீர் தேங்கும் பொழுது அதன் தன்மை மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டாவது அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் இந்த ஏரியை கொண்டு வருவதால் இதை நன்னீர் தேக்கி வைக்கும் சிறந்த ஏரியாக இருக்க வேண்டும்.

விளை நிலங்கள் பாதிக்கப்படும்:மாநகராட்சி விரிவாக்கம் செய்யும்பொழுது கழிவுநீர் சுத்திகரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றுதான் அதனை வரவேற்கிறோம், அதேசமயம் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை இந்த சின்ன வேடம்பட்டி ஏரியில் தேக்குவது என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரியில் நிரப்பினால், அந்தக் கழிவு நீரிலுள்ள ரசாயனங்கள் மற்றும் நீரின் கடினத் தன்மையால் இந்தப் பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நீண்ட காலம் தேக்கி வைக்கும்போது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஏற்படக்கூடும். ஏரியைச் சுற்றிலும் உள்ள மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விவசாயத்துக்கு, குறிப்பாக உயரமான மரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், விளை நிலங்களும் பாதிக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைத் தேக்கும்போது, அது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கழிவுநீராக மாறும் அபாயமும் உள்ளது. இந்த குளத்தில் அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தின் கீழ் நன்னீர் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் கழிவு நீரை ஏரியில் விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது,"என்றார்.

சென்னையோடம்பட்டி ஏரியை தற்போது பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து பல்வேறு பறவையினங்கள் வந்து தங்குகின்றன இந்நிலையில் இந்த ஏரியில் கழிவு நீர் விடப்பட்டால் அதன் தன்மை மாறும் எதற்காக ஏறி தூர்வாரப்பட்டதோ அதன் நோக்கம் சிதைந்து விடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புரிதல் ஏற்படுத்தப்படும்:இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "TTRO- Tertiary Treatment முறையில் சென்னையில் இதுபோன்று நான்கு ஏரிகளில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு ஏரிகளிலும் இதுபோன்று சேகரிக்கப்பட்ட கழிவு நீரை குடிநீராக சேமித்து வைக்கப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்குட்பட்டு, ஏற்கெனவே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பல குளங்களில் விட்டுவருகிறோம். மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைத்தான் ஏரியில் விடவுள்ளோம். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தால் வறட்சியாக உள்ள பகுதியின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இதை விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம். இதுகுறித்து விவசாயிகளுக்கு புரிதலை ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே இந்த முறையை வெற்றிகரமாக செயல்படுத்திவரும் குளங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்று காட்ட உள்ளோம்,"என தெரிவித்தார். எது எப்படியோ நிலத்தடி நீர் மாசடையாமல் தற்போது இருக்கும் நன் நீர் ஏரியை போல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details