சென்னை:சென்னை ஐஐடியின் உத்திசார் கூட்டாண்மை, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் புதிய ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறையில் புதுமைக்கான ஊக்கியாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் செயல்படும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை உற்பத்தி அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் சாத்தபுரம் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ஆதரித்தலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக 180 கோடி ரூபாயை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் முதலீடு செய்யும்.
இது குறித்து எச்எம்ஐஎல் நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை உற்பத்தி அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் சாத்தபுரம் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், “மாற்று எரிபொருள் மூலம் நீடித்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் இலக்கில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு உத்திசார் கூட்டாளியாக செயல்பட உறுதி பூண்டிருக்கிறது. ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் பயன்பாட்டுக்கு மாற்றுவதை விரைவுபடுத்தும் என நம்புகிறோம்.
சென்னையில் உள்ள ஐஐடி தையூர் வளாகத்தில் ஆய்வக வசதிகளை உருவாக்குவதற்காக 100 கோடி ரூபாயை எச்எம்ஐஎல் முதலீடு செய்யவிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, உமிழ்வு குறைவான எதிர்கால உந்துசக்தியாகவும், மக்கள் பயன்பாட்டுத் தீர்வுகளைக் கொண்டதாகவும் இந்த ஆய்வகம் இயங்கும்” என்றார்.